பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார்.