பாகிஸ்தான் அரசின் ஆதரவுபெற்ற தீவிரவாத அமைப்புகள்தான் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் நடத்துகின்றன என அமெரிக்க புலனாய்வுத் துறை இயக்குனர் டான் கோட்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை சன்ஜுவான் ராணுவ முகாமின் மீது பாகிஸ்தானின் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் 6 ராணுவ வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் குறித்து பேசியுள்ள டான் கோட்ஸ், ‘பாகிஸ்தான் அரசின் ஆதரவுபெற்ற தீவிரவாத அமைப்புகள்தான் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துகின்றன. இதே குழுக்கள்தான் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதல்கள் எல்லைப் பகுதிகளில் பதற்றத்தை அதிகரித்து விடுகின்றன’ என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘பாகிஸ்தான் அணு ஆயுத சோதனைகளிலும், குறைந்த, நீண்ட தூர மற்றும் கடற்படை ஏவுகணைகளை பரிசோதனை செய்துவருகிறது. இதனால், மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக’ அவர் கூறியுள்ளார்.