எங்கள் அதிபர் குட்டி ராக்கெட் மனிதரா? - அமெரிக்காவிடம் சீரிய வடகொரியா!
வடகொரியா மற்றும் அமெரிக்கா உடனான சொற்போர் நாளுக்குநாள் வலுத்துக்கொண்டே போகிறது. எந்த சமயத்திலும் போர் நடக்கலாம் என்ற அளவிற்கு இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் பி1-பாம்பர் ரக விமானங்கள் வடகொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு நெருக்கமாக பறந்து கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தின. அமெரிக்க அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை ‘குட்டி ராக்கெட் மனிதர்’ என விமர்சித்து பதிவிட்டிருந்தார்.
இதைக் கண்டிக்கும் விதமாக நியூயார்க்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய வடகொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரீ யாங் ஹோ, ‘தீமைகளின் அதிபரான ட்ரம்ப் தங்கள் அதிபரை குட்டி ராக்கெட் மனிதர் என விமர்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் வடகொரியாவை பகைத்துக் கொண்டிருப்பதன் மூலம் ட்ரம்ப் தான் தற்கொலைப்படை தாக்குதலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து வடகொரியா மற்றும் அதன் அதிபர் பற்றி பொறுப்பற்று பேசிக்கொண்டிருப்பதால், அமெரிக்காவின் மீது எங்களது ஏவுகணைத் தாக்குதல் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. இதனால் பாதிப்பைச் சந்திக்கவிருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த அப்பாவி மக்களுக்கு, இதற்கெல்லாம் உங்கள் அதிபர் ட்ரம்ப் தான் காரணம் என்பதை தெளிவுபடுத்துகிறோம்’ என தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்