சீனாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாகத் தைவான் தனி நாடாக உருவானது. இருப்பினும் சீனா தைவானை தங்கள் நாட்டில் இருந்து பிரிந்த ஒரு மாகாணமாகவே கருதுவதோடு, மீண்டும் அந்தநாட்டை தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவர முயன்று வருகிறது.
இதற்காகச் சீனா படைபலத்தையும் உபயோகிக்கத் தயாராகவே உள்ளது. இந்தநிலையில் அண்மைக்காலமாகத் தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் அதிக அளவிலான சீனா விமானங்கள் ஊடுருவி அச்சுறுத்தி வருகின்றன. இதற்கிடையே அண்மையில் சீன அதிபர் தைவான் குறித்துப் பேசும்போது, 'தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பணி நிறைவேற்றப்பட வேண்டும்" எனவும் 'தைவான் மக்களின் நலனுக்காக அமைதியான வழியில் அந்த இலக்கை அடையவேண்டும்" எனவும் தெரிவித்தார்.
இருப்பினும் தொடர்ந்து சீனா, போர் விமானங்கள் தைவானை அச்சுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் சி.என்.என் ஊடக நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் சீனா தைவானைத் தாக்கினால், அமெரிக்கா தைவானைப் பாதுகாக்குமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஜோ பைடன், ஆம்...நாங்கள் அதற்காக உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். தைவான் தன்னை பாதுகாத்துக்கொள்ள வழிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே அந்தநாடு தொடர்பான அமெரிக்காவின் கொள்கையாக இருந்து வருகிறது. ஆனால் தைவானை நேரடியாகப் பாதுகாப்பதாக அமெரிக்கா எப்போதும் தெரிவித்ததில்லை. இந்த சூழலில் ஜோ பைடன் தைவானைச் சீனா தாக்கினால் பாதுகாப்போம் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் தைவான் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.