Skip to main content

கொண்டாட்டமா? திண்டாட்டமா? - ‘குடும்பஸ்தன்’ விமர்சனம்

Published on 25/01/2025 | Edited on 25/01/2025
manikandan Kudumbasthan movie review

நடிகர் மணிகண்டன் நாயகனாக நடிக்கும் படங்கள் தொடர்ந்து சிக்சர் அடித்த வண்ணம் இருக்கின்ற இந்த சூழலில் அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் குடும்பஸ்தன். இந்தத் திரைப்படமும் அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்ததா, இல்லையா? என்பதை பார்ப்போம்..

நாயகன் மணிகண்டன் தனது காதலி ஒடுக்கப்பட்ட வகுப்பை சார்ந்த சாந்தவி மேக்னாவை பெற்றோர்கள் எதிர்ப்புடன் பதிவு திருமணம் செய்து கொள்கிறார். இது மணிகண்டனின் பெற்றோர்களுக்கு பிடிக்காமல் போனாலும் அவர்களது வீட்டிலேயே இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்த அனுமதிக்கின்றனர். மணிகண்டனின் தந்தை ஆர் சுந்தர்ராஜன் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவராக இருந்தாலும் அவருக்கு போதிய வருமானம் கிடையாது. இதனால் குடும்பத்தின் முழு பொறுப்பும் மணிகண்டன் தலையில் விழுகிறது. மறுபக்கம் கர்ப்பமாக இருக்கும் மனைவி வேலைக்கு செல்லாமல் ஐஏஎஸ் தேர்வுக்காக பயிற்சி எடுத்து வருகிறார்.

manikandan Kudumbasthan movie review

இதனால் குடும்பத்தின் முழு பொறுப்பும் கவனிக்கும் நிலையில் இருக்கும் மணிகண்டனுக்கு அவரது அலுவலகத்தில் நடக்கும் ஒரு பிரச்சனையால் வேலையை இழக்க நேர்கிறது. இதனால் முற்றிலும் வருமானத்தை இழக்கும் அவர் குடும்பத்தின் பிரச்சினைகளை சரிகட்ட கடன் மேல் கடன் வாங்குகிறார். ஒரு கட்டத்தில் அந்த கடன்கள் அவர் கையை மீறி சென்று தலைக்கு மேல் மலை போல் குவிந்து நிற்கிறது. இதனால் செய்வது அறியாத தவிக்கும் மணிகண்டன் ஒரு பேக்கரி ஆரம்பிக்கிறார். அந்த பேக்கரி தொழில் அவருக்கு கை கொடுத்து கடன்களை அடைத்ததா, இல்லையா? அடுத்தடுத்து அவர் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் என்ன? அதனால் அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பதே இந்த குடும்பஸ்தன் படத்தின் மீதி கதை. 

நாம் அன்றாடம் சந்திக்கும் வழக்கமான பிரச்சனைகளை உள்ளடக்கிய ஒரு குடும்பப்படமாக உருவாகி இருக்கும் இந்த குடும்பஸ்தன் திரைப்படம் திரைக்கதையில் சற்றே மாறுபட்டு மிகவும் கலகலப்பான ஒரு படமாக மாறி இந்தாண்டின் கவனத்துடன் கூடிய ஜனரஞ்சகமான மிகப் பெரிய வெற்றி படமாக மாறி இருக்கிறது. சுயமரியாதை, கடன் கொடுக்கும் மொபைல் ஆப், சருக்கலை கொடுக்கும் பிசினஸ், குடும்பத்துக்காக சுற்றி சுற்றி வாங்கும் கடன்கள், அதை அடைக்க முடியாமல் தவிக்கும் மிடில் கிளாஸ் பையனின் மனநிலை என இக்கால நடுத்தர மக்களின் வாழ்வியலை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து அதனை கலகலப்பாக கூறி இருப்பது பார்ப்பவர்களின் மனநிலையோடு நன்றாக ஒத்துப்போய் அப்படியே ஜெல் ஆகிவிடுகிறது. அதுவே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியாக மாறி இருக்கிறது. 

manikandan Kudumbasthan movie review

அதேசமயம் இப்படி ஒரு சீரியஸான கதையை எடுத்துக்கொண்டு அதை இந்த அளவு ஜனரஞ்சகமான காமெடி கலந்த கலகலப்பான உணர்வுபூர்வமாக படமாக கொடுத்து பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல கன்டென்ட் கூடிய பரவசம் கொடுக்கக்கூடிய படமாக கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் நக்கலைட்ஸ் புகழ் ராஜேஸ்வர் காளி சாமி. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களின் பட்டியலில் இவர் நிச்சயமாக இணைய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. படம் ஆரம்பித்து முதல் பாதி எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் ஜெட் வேகத்தில் கலகலப்பாக நகர்ந்து இரண்டாம் பாதியில் சற்று சில இடங்களில் ஸ்பீடு பிரேக்கர் போட்டு மீண்டும் வேகம் எடுத்த திரைப்படம் இறுதி கட்ட காட்சிகளில் கலகலப்பாகவும் அதேசமயம் அழுத்தமான காட்சி அமைப்புகளாகவும் கலந்து கட்டி முடிந்து ஒரு நல்ல பீல் குட் குடும்ப திரைப்படம் பார்த்த உணர்வை இந்த குடும்பஸ்தன் கொடுத்திருக்கிறார்.

படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிக்கும், அதற்கேற்றப்படியான வசனங்கள் கொடுக்கப்பட்ட விதத்திற்கும், திரைக்கதைக்கு வேகம் ஏற்படுத்தக் கூடிய காட்சி அமைப்புகளுக்கும் மிகுந்த உழைப்புகளை கொட்டி கொடுத்து இப்படத்தை வெற்றி படம் ஆக்கியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இயக்குநர் உழைத்திருப்பது அப்படியே இப்படத்தில் பிரதிபலித்திருக்கிறது. அதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்த்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய இரண்டாவது வெற்றி படமாக இந்த குடும்பஸ்தன் அமைந்திருக்கிறது.

manikandan Kudumbasthan movie review

படத்துக்கு படம் தனது பெர்ஃபார்மன்ஸ் மூலம் ரசிகர் படையை இன்னமும் பெரிதாக்கி வருகிறார் நடிகர் மணிகண்டன். மற்ற படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தில் மிகவும் கலகலப்பாகவும் அதேசமயம் நடிப்பில் பல்வேறு பரிணாமங்களையும் சிறப்பாக காட்டி ஒரு படி மேலே போய் கைதட்டல் பெற்றிருக்கிறார். குறிப்பாக கோயம்புத்தூருக்கு உரித்தான ஸ்லாங் மற்றும் வசன உச்சரிப்பு மற்றும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சமாளிக்கும் இடத்தில் அவர் செய்யும் சாகசங்கள் என நடிப்பில் அகலம் செய்து பார்ப்பவர்களை சிரிப்பலையில் மூழ்கடிக்க செய்து கைதட்டலும் பெற்று இருக்கிறார். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு எமோஷனல் தேவையோ அதை சிறப்பாக கொடுத்து அதே சமயம் கலகலப்பான தனது நடிப்பின் மூலம் இவ்வளவு சீரியஸான ஒரு படத்தையும் சிரிப்பின் மூலம் நம்முள் கடத்தி நேர்த்தியான நடிப்பின் மூலம் படத்தையும் மெகா ஹிட் ஆக உதவி இருக்கிறார். குறிப்பாக இவர் பாத்ரூமில் புலம்பும் காட்சிகளே அதற்கு சான்று.

நாயகி சாந்தவி மேகனா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் வலு சேர்க்கும் படியான கதாபாத்திரமாக இந்த கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அதனாலேயே படத்தில் இருக்கும் திரைக்கதைக்கும் இவரது கதாபாத்திரம் வலு சேர்த்து இருக்கிறது. நாயகனின் மாமாவாக வரும் குரு சோமசுந்தரம் வேறு ஒரு பரிமாணத்தில் நடிப்பை வெளிப்படுத்தி காமெடி செய்திருக்கிறார். இவரும் மணிகண்டனும் செய்யும் அட்ரா சிட்டியை இப்படத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார். படத்தின் இன்னொரு நாயகனாகவே மாறி இருக்கிறார் நடிகர் குரு சோமசுந்தரம். குறிப்பாக இவரது சிரிப்பு படத்தில் பெரிய ஹைலைட்.

manikandan Kudumbasthan movie review

மணிகண்டனின் அக்காவாக நடித்திருக்கும் நடிகையும் கிடைக்கின்ற கேப்புகளில் எல்லாம் சிறப்பாக நடித்து வலு சேர்த்திருக்கிறார். குறிப்பாக மணிகண்டனின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். இவரது கலகலப்பான நடிப்பு படத்திற்கு தூணாக நிற்கிறது. தந்தையாக வரும் ஆர் சுந்தர்ராஜன் வழக்கமான தந்தையாக வந்து செல்கிறார். நக்கலைட்ஸ் யூடியூப் குழுவில் வரும் நடிகர்கள் பெரும்பாலானோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அவர்களின் நடிப்பு மிக மிக சிறப்பாக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. குறிப்பாக படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுமே அவரது வேலையை மிக மிக சிறப்பாக செய்து இப்படத்தை ஒரு பிளாக்பஸ்டர் வெற்றி படமாக மாற்ற உதவி இருக்கின்றனர். 

வைசாக் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய வலு சேர்த்து இருக்கிறது. இவரது ஸ்பாண்டியஸ் ஆன இசை படம் முழுவதும் படர்ந்து நம்மை அதனோடு ஒன்றை வைத்து இருக்கிறது. சுஜித் என் சுப்பிரமணியன் ஒளிப்பதிவில் நாயகனின் வீடு மற்றும் பேக்கரி சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்திற்கு எந்த அளவு கலர் தேவையோ அதை சிறப்பாக கொடுத்து தெளிவான படமாக கொடுத்திருக்கிறார். 

இன்றைய காலகட்டத்தில் ஒரு சாமானியன் எதிர்கொள்ளும் குடும்ப பிரச்சினைகளையும், அதனால் ஏற்படும் கடன் தொல்லைகள் மற்றும் சுயமரியாதை பிரச்சனைகள் என மிகவும் சீரியஸான ஒரு கதைக்களத்தை தேர்வு செய்த இயக்குநர் ராஜேஸ்வர் காளி சாமி அதை மிகவும் ஜனரஞ்சகமாகவும், அதே சமயம் ஆழமாகவும் இக்கால ட்ரெண்டுக்கேற்ப மிக மிக சிறப்பாக கொடுத்து இந்தாண்டின் தொடக்கத்தின் ஒரு நல்ல கன்டென்ட் உடன் கூடிய பிளாக்பஸ்டர் வெற்றி படமாக இந்த குடும்பஸ்தன் படத்தை கொடுத்திருக்கிறார். 

குடும்பஸ்தன் - குடும்பத்துக்கு நெருக்கமானவன்!

சார்ந்த செய்திகள்