Skip to main content

“அரசியலமைப்பின் அடித்தளத்தை போற்றுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 26/01/2025 | Edited on 26/01/2025
CM MK Stalin says Let us honor the foundation of the Constitution

நாட்டின் 76வது குடியரசு தின விழா இன்று (26.01.2025) கோலாகலமாகத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாகத் தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இன்று காலை 8 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றக்கொண்டார். இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சபாநாயர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி எனப் பலரும் பங்கேற்றனர்.

முன்னதாக சென்னை போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கொடியேற்றும் இடத்திற்கு வந்த ஆளுநரை முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதோடு பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை ஆளுநருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது தலைமை செயலாளர் முருகானந்தம் உடன் இருந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கினார். இதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டன.

இந்நிலையில் குடியரசு தினவிழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  எக்ஸ் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த 76வது குடியரசு தினத்தில், அனைவருக்கும் நீதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் நமது அரசியலமைப்பின் அடித்தளத்தை போற்றுவோம். முற்போக்கான, உள்ளடக்கிய மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை உருவாக்குவதற்கான நமக்கு தரப்பட்ட கடமையை இந்த நாள் நமக்கு நினைவூட்டட்டும். அனைவருக்கும் நம்பிக்கையும் நோக்கமும் நிறைந்த குடியரசு தின வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்