அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்ப், கடந்த 20ஆம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற போது பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும் அறிவிப்பு, உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவு, சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள், பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து என அதிரடி உத்தரவுகளை அறிவித்தார்.
1868ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த சட்டமான, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாமாக குடியுரிமை வழங்கும் சட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்வதாக உத்தரவிட்டார். அந்த உத்தரவில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தை குடியுரிமை பெற குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அமெரிக்க குடிமகனாக, சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளராக அல்லது அமெரிக்க ராணுவத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதை தவிர்த்து, தந்தை அமெரிக்க குடிமகனாக இல்லாவிட்டாலோ, தாய் சட்டவிரோதமாக குடியேறியவர் என்றாலோ, சட்டப்பூர்வமான நிரந்தர குடியுரிமை இல்லாதவர் என்றாலோ அல்லது மாணவர் சுற்றுலா விசாவில் வந்திருப்பவர் என எப்படி இருந்தாலும் அங்கு பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டம் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எச்1பி விசா போன்ற சட்டப்பூர்வ குடியேற்றம் கொண்டவர்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த உத்தரவு வரும் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், எச்1பி விசா மூலம் அமெரிக்கா சென்றுள்ள இந்தியர்கள் மற்றும் கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தாமாக குடியுரிமை கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதற்கிடையில், பிரசவ சுற்றுலாவுக்காக அமெரிக்கா சென்ற இந்திய தம்பதிகள், அறுவை சிகிச்சை மூலம் கருவில் இருக்கும் குழந்தைகளை உடனே பெற்றடுக்க வேண்டும் என்று அவசரம் காட்டி வருவதாகவும், 7 மாதம் முதல் 9 மாதம் வரையிலான கர்ப்பிணி பெண்கள், அதிகளவில் மருத்துவமனையில் அட்மிட்டாகி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகின.
டிரம்ப் போட்ட உத்தரவுக்கு எதிராக அங்குள்ள வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான உத்தரவு என்று குறிப்பிட்டு, பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை கோர முடியாது என்ற டிரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.