ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 19 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இலக்கியம், கலை உள்ளிட்ட சேவைகளுக்காக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படவுள்ளது. அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின், சமையல் கலைஞர் தாமு, தாமோதரன், தட்சிணாமூர்த்தி, ராதாகிருஷ்ணன், தேவசேனாதிபதி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் கலைத்துறையில் நடிகர் அஜித் குமார், நடிகை சோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, தினமலர் லட்சுமிபதி ராம சுப்பையார் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் குமாருக்கும், கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளுள் ஒன்றான பத்ம பூஷன் விருது பெறத் தேர்வாகியுள்ள தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், கலை, விளையாட்டு, ட்ரோன் வடிவமைப்பு என பல்துறைகளில் தனக்கென தனிமுத்திரை பதித்துள்ள அன்புச் சகோதரர் அஜித்குமாருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
இன்னும் பல சிகரங்களைத் தொட்டு, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் புகழ் சேர்க்க வாழ்த்துகிறேன். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவராகத் திகழ்ந்து, தனது பல்வேறு சாதனைகளால் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த அருமைச் சகோதரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.