அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வடகொரியா. அதேபோல சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். அண்மையில் ஏவுகணைகளை வீசி கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர். இப்படி இருக்க தற்போது வடகொரியாவில் தன்னையும் தங்கள் நாட்டையும் உளவு பார்த்ததாக உளவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவில் வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் வெளி உலகத்திற்கு கசிந்து விடக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூகுள் இணையதளத்தில் கிம் ஜாங் உன் குறித்த தகவல்களைத் தேடி உள்ளார். இது எப்படியோ கிம் காதுகளை எட்ட, அந்த அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.