செவ்வாய்க் கிரகத்தைப் பற்றி ஆய்வு நடத்தி வரும் விஞ்ஞானிகள், தற்போது அக்கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறியும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த வருடம் ‘பெர்சவரன்ஸ்’ என்ற விண்ணூர்தியை (ரோவர்) செவ்வாய்க்கு அனுப்பியது.
இந்த விண்ணூர்தி செவ்வாய்க் கிரகத்தில் செய்யும் ஆய்வு மூலம், அங்கு உயிர்கள் இருக்கிறதா என்பது குறித்து தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என ஏற்கனவே நாசா தெரிவித்திருந்தது. இந்த விண்ணூர்தி, கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் பயணம் செய்து கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த ‘பெர்சவரன்ஸ்’ விண்ணூர்தியில், ‘இன்ஜெனுயிட்டி’ என்ற ஹெலிகாப்டரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் நாசா ஆய்வினை மேற்கொள்ளவுள்ளது. இந்த இன்ஜெனுயிட்டி ஹெலிகாப்டரை ஏப்ரல் 11 ஆம் தேதி இயக்க முதலில் நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால் மென்பொருள் தொடர்பான பிரச்சனையால், திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது செவ்வாய்க் கிரகத்தில், ‘இன்ஜெனுயிட்டி’ ஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் பறந்ததாக நாசா அறிவித்துள்ளது. இதன்மூலம் பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில், முதன்முதலாக விமானம்/ஹெலிகாப்டரை இயக்கி நாசா வரலாறு படைத்துள்ளது. இதற்கு முன்பு வேற்றுக்கிரகம் எதிலும் விமானமோ, ஹெலிகாப்டரோ பறந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.