இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அந்நாட்டில் இந்திய பிரதமர் மோடிக்கு வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கட் அவுட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இஸ்ரேலில் வரும் செப்டம்பர் 17-ம் தேதி அந்நாட்டு பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமை அலுவலகத்தில் தான் இந்த பிரமாண்ட போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற உள்ள பிரதமர் தேர்தலில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு சாதகமான சூழல் இல்லை என கணிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது ஆட்சிக்காலத்தில் இஸ்ரேல் அரசு மேற்கொண்ட சர்வதேச ஒப்பந்தங்கள், திட்டங்கள் ஆகியவற்றை மக்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக இந்த போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
15 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் உச்சியிலிருந்து சுமார் 10 மாடி உயரத்திற்கு இந்த போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய பிரதமர் மோடியின் போஸ்டர் மட்டுமின்றி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் ஆகியோரும் நேதன்யாகுவுடன் கைகுலுக்கும் போஸ்டர்களும் இடம்பெற்றுள்ளன. தேர்தலுக்கு முன்னதாக செப்டம்பர் 9-ம் தேதி இந்தியாவுக்கு நேதன்யாகு வரவுள்ளார் எனபதும் குறிப்பிடத்தக்கது.