இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்துக்களால் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், வங்கதேசத்தின் கொமில்லா நகரில் உள்ள இந்து கோவிலில் குர்ஆனை அவமதித்ததாகக் தகவல் பரவியதையொட்டி, அந்த நகரில் இந்து கோவில்களும், துர்கா பூஜை பந்தல்களும் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டன.
இதனையடுத்து, கொமில்லாவிற்கு அருகிலுள்ள மேலும் மூன்று நகரங்களில் கோவில்களும், துர்கா பூஜை பந்தல்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கொமில்லா பகுதியில் தொடங்கிய கலவரம் மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இந்தக் கலவரத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், 22 பேர் காயமடைந்துள்ளதாகவும் வங்கதேச ஊடகங்கள் கூறுகின்றன.
இதையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த வங்கதேசத்தின் 22 மாவட்டங்களில் பாராமிலிட்டரி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வங்கதேச காவல்துறை, இந்து கோவில்கள் மற்றும் துர்கா பூஜை பந்தல்களைச் சேதப்படுத்தியது தொடர்பாக 43 பேரை கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில், வங்கதேசத்தில் இந்து கோவில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, இந்திய தூதரகம் வங்கதேச அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், "வங்கதேசத்தில் மதக் கூட்டங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த சில செய்திகளை நாங்கள் பார்த்தோம். வங்கதேச அரசாங்கம் அதற்கு கடுமையாக எதிர்வினையாற்றியதையும் கவனத்தில் கொண்டுள்ளோம். துர்கா பூஜை கொண்டாட்டங்கள் வங்கதேசத்தில் தொடர்கின்றது என்பதையும் நாங்கள் தெரிந்துகொண்டுள்ளோம். நமது தூதரகம் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது" என தெரிவித்துள்ளார்.