தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யீயோலை கைது செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்கொரிய அதிபராக இருந்த யூன் சுக் யீயோல் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இரவு அந்நாட்டில் திடீரென அவசரநிலை ராணுவச் சட்டத்தை அறிவித்தார். நாட்டின் நிர்வாகத்தை எதிர்க்கட்சிகள் குறுக்கீடு செய்வதாகவும், வடகொரியாவுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், எதிர்நிலை செயல்பாடுகளை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டி யூன் சுக் யீயோல், அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால், இந்த அவசரநிலை ராணுவச் சட்டத்தை திரும்ப பெறுவதாக அந்நாட்டு அதிபர் யூன் சுக் யீயோல் அறிவித்தார்.
ராணுவநிலை அவரச சட்டம் அமல்படுத்தியதற்கு தென்கொரிய அதிபர் யூன் சுக் யீயோல் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டங்கள் நடத்தினர். அதனை தொடர்ந்து, , தென் கொரிய அதிபர் யூன் சுக் யீயோல் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தில் ஆளுங்கட்சி உள்பட 204 உறுப்பினர்கள், அதிபரின் பதவி நீக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால், பெரும்பான்மை கிடைத்த பட்சத்தில் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இந்த விவகாரத்தில் யூன் சுக் யீயோல், சதி தீட்டம் தீட்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையில், அவசர நிலை பிரகடனபடுத்தியால் யூன் சுக் யீயோலை கைது செய்ய தென்கொரியாவில் உள்ள சியோல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில், சியோலில் உள்ள யூன் சுக் இல்லத்திற்கு சென்று அவரை கைது செய்யும் நடவடிக்கையில் விசாரணைக் குழு அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால், யூன் சுக் யீயோலின் ஆதரவாளர்கள் அவரது இல்லத்திற்கு அருகே முகாமிட்டு யீயோலுக்கு ஆதரவாக முழுக்கங்களை எழுப்பினர். இதனால், அவரை கைது செய்ய முடியாமல் விசாரணை குழு அதிகாரிகள் திரும்பச் சென்றதாகக் கூறப்படுகிறது.