Skip to main content

ட்ரம்ப்பின் திடீர் முடிவால் உலகம் முழுதும் ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள்...

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

markets surge as trump accepts for transition

 

 

ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு ட்ரம்ப் சம்மதித்துள்ள நிலையில், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பங்குச்சந்தைகள் ஏற்றத்தைச் சந்தித்துள்ளன. 

 

அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில், பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவையான நிலையில், பைடன் 306 தேர்தல் சபை வாக்குகள் பெற்றார். ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 232 தேர்தல் சபை வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகக்கூறி அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் வழக்கு தொடுத்துள்ளனர். 

 

இந்நிலையில், அமெரிக்க தேர்தல் முடிவுகள் தொடர்பான ட்ரம்ப்பின் நிலைப்பாட்டிற்கு அவரது சொந்தக்கட்சிக்குள்ளேயே அதிருப்தி அதிகரித்தது. ஆரம்பத்தில் ட்ரம்ப்பின் கருத்துகளுக்கு ஆதரவாக நின்ற அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் தற்போது, அந்நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க ஆரம்பித்துள்ளனர். அதோடு, ட்ரம்ப்பை தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தியும் வருகின்றனர். இந்நிலையில், ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு டொனல்டு ட்ரம்ப் சம்மதித்துள்ளார். அமெரிக்காவின் அதிகார மாற்றத்தைச் செயல்படுத்தும் ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன், ஜோ பைடன் தேர்தலில் வெற்றிபெறத்தக்க அதிகாரபூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார். அதிகார மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டுள்ள ட்ரம்ப், தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து எதிர்த்துப் போராடுவேன் எனத் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் அதிகார மாற்றத்திற்கு ஒப்புக்கொண்ட செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் பதவியைச் சுற்றி ஏற்பட்டிருந்த குழப்பங்கள் விளக்கியுள்ளன. இதன் காரணமாக, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்