மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், சீன ஆதரவு நிலைப்பாடு உள்ள முகமது முய்சு வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டி இனி எந்த நாட்டு ராணுவத்திற்கும் இடம் கிடையாது என்று அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, கடந்த 15ஆம் தேதி மாலத்தீவில் முகாமிட்டிருக்கும் இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என அறிவித்தார். இது குறித்து அவர், ‘மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை மார்ச் 15 ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும். மாலத்தீவில் இருந்து உடனடியாக இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு’ என்று தெரிவித்தார். சமீபத்தில் சீனப் பயணம் மேற்கொண்ட முகமது முய்சு, இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். மாலத்தீவு அதிபரின் இந்த அறிவிப்பால் இந்தியா - மாலத்தீவு இடையிலான விரிசல் மேலும் அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 28ஆம் மாலத்தீவில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்ட 4 அமைச்சர்களுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற வாக்கெடுப்பு நடைபெறுவதாக அந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பு மோதலாக மாறியது. இதனால், நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, நாடாளுமன்றம் நேற்று (29-01-24) மீண்டும் கூடியது. அப்போது, புதிதாக நியமிக்கப்பட்ட 4 அமைச்சர்களுக்கு ஒப்புதல் அளிக்க முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இறுதியில் அமைச்சரவையில் 1 அமைச்சரை மட்டும் சேர்க்க எதிர்க்கட்சி ஒப்புக்கொண்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர மாலத்தீவு ஜனநாயக கட்சி முடிவு செய்துள்ளது.
இதற்கான தீர்மானத்தில் போதுமான எம்.பி.க்களிடம் கையெழுத்து பெறப்பட்ட நிலையில், இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மாலத்தீவு நாடாளுமன்றத்தில் 56 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால் அதிபரை பதவிநீக்கம் செய்யும் வகையில் அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 80 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜனநாயகவாதிகள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு 68 எம்.பி.க்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.