அமெரிக்கா கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனையில் 30,000 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 1.6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6.5 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் பரவல் அதிகரித்து வரும் சூழலில், இந்த வைரஸுக்கு தடுப்பூசி கண்டறியும் பணி, பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி, சீனா மற்றும் அமெரிக்காவின் தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனைகளை எட்டியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும், மாடர்னா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசி, இறுதிகட்ட சோதனையாக 30,000 பேருக்கு செலுத்தி, அவர்களை சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு வயதினர், பல்வேறு இனத்தினர் மற்றும் வெவ்வேறு மாதிரியான உடல் ஆரோக்கியம் கொண்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை வெற்றிபெறும் பட்சத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை மாடர்னா நிறுவனம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.