மலேசியா நாட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அந்தநாட்டில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் பெரிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.இதுவரை 70,000 பேர் வெள்ளத்தின் காரணமாக தங்கள் வசித்து வந்த இடத்திலிருந்து தற்காலிகமாக வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும் இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேதத்தை மதிப்பிடும் பணிகளும் தொடங்கியுள்ளன. மலேசிய இராணுவம், படகுகளை பயன்படுத்தி வீடுகளில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு விநியோகித்து வருகிறது.
மலேசியாவில் மழைக்காலமான நவம்பர் முதல் பிப்ரவரியில் ஆண்டுதோறும் ஏற்படுவது வழக்கம் என்றாலும், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம், 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மோசமான வெள்ளமாக பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்திற்கு புவி வெப்பமடைதல் முக்கிய காரணமாக கருதப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.