Skip to main content

இளம் வயதில் நோபல் பரிசுபெற்ற மலாலா திடீர் திருமணம்!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

MALALA FAMILY

 

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய், பெண் கல்விக்காகப் பிரச்சாரம் செய்ததால் கடந்த 2012ஆம் ஆண்டு, அவருடைய 15வது வயதில் தலிபான் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டு, பாகிஸ்தான் மற்றும் பிரிட்டனில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை காரணமாக உயிர் பிழைத்தார்.

 

மலாலாவை சுட்டபிறகு தலிபான்கள், அவர் உயிர் பிழைத்தால் மீண்டும் அவர் மீது தாக்குதல் நடத்துவோம் என அறிவித்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் திரும்ப முடியாத மலாலா, பிரிட்டனில் வசிக்கத் தொடங்கியதோடு, தொடர்ந்து பெண் கல்விக்காகப் போராடிவருகிறார். மேலும், மலாலா நிதி என்ற ஒன்றை ஆரம்பித்து பாகிஸ்தான், நைஜீரியா, ஜோர்டான், சிரியா மற்றும் கென்யாவை மையமாக கொண்டு செயல்படும் உள்ளூர் கல்வி ஆலோசனை குழுக்களை ஆதரித்துவருகிறார்.

 

மலாலா, தொடர்ந்து பெண் கல்விக்காகப் போராடுவதால் கடந்த 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். 17 வயதில் நோபல் பரிசுபெற்ற மலாலா, இளம் வயதில் நோபல் பரிசுபெற்ற நபர் என்ற சாதனையையும் படைத்தார்.

 

இந்தநிலையில், மலாலா தற்போது அசர் மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அசர் மாலிக், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மேலாளராக உள்ளார். இவர்களது திருமணம், இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்றது. தனது திருமண புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மலாலா, “இது எனது வாழ்வின் பொன்னான நாள்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்