இயற்பியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, வேதியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்த பங்களிப்பை அளிப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பரிசுக்கான பரிந்துரைகளை, இதற்கு முன் நோபல் பரிசு வென்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் செய்யலாம். இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுக்கு 329 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பரிந்துரை பட்டியலில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் க்ரெட்டா தன்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரும், அந்த நாட்டின் அதிபர் புதினை கடுமையாக எதிர்த்து வருபவருமான அலெக்ஸி நவல்னி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரஷ்யாவை ஜனநாயகமாக்கும் அமைதியான முயற்சிகளுக்காக அந்த நாட்டு கல்வியாளர்களால் அலெக்ஸி நவல்னி பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார நிறுவனமும் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏழைநாடுகள் கரோனா தடுப்பூசியைப் பெற, உலக சுகாதாரம் நிறுவனம் எடுத்து வரும் முயற்சிகளுக்காக, அந்த நிறுவனம் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான நோபல் பரிசை வெல்பவர்கள், யார் யார் என்பது வரும் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும்.