Skip to main content

கண்டன தீர்மானதிற்கு ஆதரவு அளித்த சொந்தக் கட்சியினர்; ஆனாலும் தப்பித்த ட்ரம்ப்!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

trump

 

அமெரிக்காவில் கடந்த வருடம் நடந்த அதிபர் தேர்தலில், ஜோ பைடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர், ஜனவரி 20 ஆம் தேதி  பதவியேற்றுக் கொண்டார்.

 

இதற்கிடையே அமெரிக்க அதிபராக பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, ஒப்புதல் அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியபோது, நாடாளுமன்றத்தில் நுழைந்த டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்கப் போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

 

இந்நிலையில் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நடந்த வன்முறையைத் தூண்டிவிட்டதாக ட்ரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானம் நிறைவேறினால் ட்ரம்ப், இனி அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்ற நிலையில், இந்தத் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.

 

அதனையடுத்து ட்ரம்ப் மீதான கண்டன தீர்மானம், செனட் சபையில் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 57பேரும், எதிராக 43 பேரும் வாக்களித்தனர். ட்ரம்பிற்கு எதிராக வாக்களித்த ஏழு பேர் ட்ரம்பின் கட்சியைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் தீர்மானம் நிறைவேற தேவையான மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காததால், கண்டன தீர்மானத்திலிருந்து ட்ரம்ப் தப்பினார்.

 

100 பேர்கொண்ட செனட் சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற 67 வாக்குகள் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்