வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நிர்வாக வசதிக்காக தன்னுடைய தங்கையான கிம் யோ ஜாங்கிடம் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரிய நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகிக்கிறார். வெளி உலகத்தோடு எந்த தொடர்பும் அற்ற தனித்த பகுதியாகவே வட கொரியா இருந்து வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் கரோனா தொற்று அந்நாட்டின் பொருளாதாரத்தை பெரும் அளவில் ஆட்டம் காணச்செய்துள்ளது. இதனால் தற்போது வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க வீட்டில் உள்ள வளர்ப்பு நாய்களை கறிக்காக பயன்படுத்த அரசாங்கத்திடம் ஒப்படையுங்கள் என அதிபர் கிம் ஜாங் உன் சில தினங்களுக்கு முன்னால் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இப்பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், நிர்வாக வசதிக்காகவும் கிம் யோ ஜாங்கிடம் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க அதிபர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிபர் கிம், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது வடகொரிய நிர்வாகத்தை அவரது தங்கை பின்னிருந்து நடத்தினார். சீனா மற்றும் அமெரிக்க நாட்டு அதிபர்களுடன் கிம் ஜாங் உன் நடத்திய சந்திப்புகள் அனைத்தையும் அவரது தங்கை கிம் யோ ஜாங்க் தான் ஒருங்கிணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.