இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட போது, பிணையக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணையக் கைதிகளில் 31 போர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 57,614 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. அதனை அவரே செய்தி சேகரிப்பின் நேரலையில் கூறியது பலரையும் கலங்க வைத்தது.
இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், நேற்று முன் தினம் (04-03-24) லெபனான் நாட்டில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் நாட்டின் மேற்கு பகுதியின் கலிலீ மாகாணத்தில் உள்ளா மார்கலியோட் பகுதியை தாக்கியது. இந்த தாக்குதலில் அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அதில், கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பாட்னிபின் மேக்ஸ்வெல் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதே வேளையில், அந்த தாக்குதலில் காயமடைந்த கேரளாவைச் சேர்ந்த புஷ் ஜோசப் மற்றும் பால் மெல்வின் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இஸ்ரேலில் இறந்து போன பார்னிபின் மேக்ஸ்வெலுக்கு, 7 மாத கர்ப்பிணி மனைவியும், 5 வயதில் மகளும் உள்ளனர். மேக்ஸ்வெல்லின் உடல் சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு 4 நாட்களில் கேரளா வந்து சேரும் என கூறப்படுகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இறந்து போன முதல் இந்தியர் மேக்ஸ்வெல் ஆவர். இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள், வடக்கு மற்றும் தெற்கு எல்லை பகுதிகளில் பாதுகாப்பாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், +972-35226748 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அவசர உதவி கோரலாம் என்றும், 24 மணிநேரமும் இந்த அவசர உதவி எண் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி கோருவதற்கு வசதியாக cons1.telaviv@mea.gov.in என்ற ஈமெயில் முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது.