பிரதமர் மோடி உக்ரைன் சென்றுள்ள நிலையில் அந்நாட்டின் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்து உரையாற்ற இருக்கிறார்.
வெளிநாட்டு பயணமாக போலந்து சென்றுள்ள பிரதமர் மோடி போலந்து நாட்டில் இருந்து குண்டு துளைக்காத சிறப்பு ரயில் மூலம் உக்ரைனின் கீவ் நகருக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேபோல் உக்ரைன் நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் இதன் மூலம் மோடி பெற்றிருக்கிறார்.
வர்த்தக ரீதியாக இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகிறது. தொடர்ந்து ரஷ்யாவுக்கு நட்புறவையும் கொடுத்து வருகிறது. அதேநேரம் ரஷ்யா-உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டிற்கு மருந்துப் பொருட்கள், நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. 'இது போருக்கான காலமல்ல அமைதிக்கான காலம்' என்பதை தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் உக்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபருடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.