ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
அமெரிக்காவும் தங்கள் நாட்டு குடிமக்களையும், தலிபான்களின் இலக்குக்கு ஆளாகும் வாய்ப்புள்ள ஆப்கானிஸ்தான் நாட்டவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இதற்காக காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கா தனது இராணுவ வீரர்களைக் குவித்துள்ளது.
இந்தநிலையில், ஆப்கன் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜோ பைடன், மீட்புப் பணிகள் ஆபத்தானது என தெரிவித்துள்ளதோடு, தலிபான்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "ஜூலை முதல் 18,000க்கும் அதிகமான மக்களை ஆப்கனிலிருந்து மீட்டுளோம். ஆகஸ்ட் 14ஆம் தேதி விமானம் மூலம் மீட்புப்பணிகளைத் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 13 ஆயிரம் பேரை மீட்டுள்ளோம். இந்த மீட்புப்பணி பணி ஆபத்தானது. மீட்புப் பணியில் இராணுவப் படைகள் ஆபத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது. கடினமான சூழ்நிலைகளில் இந்த மீட்புப்பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த மீட்புப் பணியின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என என்னால் உறுதியளிக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஜோ பைடன், "நாங்கள் விமான நிலையத்திற்குப் பாதுகாப்பு அளித்துள்ளோம். பிற நாடுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பயணிகள் விமானங்களைப் பயன்படுத்தி தங்கள் நாட்டு குடிமக்களையும், பாதிப்புக்குள்ளாகக் கூடிய வாய்ப்புள்ள ஆப்கன் மக்களையும் மீட்க வழிவகை செய்துள்ளோம்." என கூறியுள்ளார்.
ஏற்கனவே மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினால், அழிவைத் தரும் வகையிலான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோ பைடன் தலிபான்களை எச்சரித்திருந்தார். இந்தநிலையில், நேற்று (20.08.2021) மீண்டும் ஜோ பைடன் தலிபான்களை எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "எங்களது படைகள் மீது தாக்குதல் நடத்தினாலோ, விமான நிலையத்தில் நடைபெறும் மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்படுத்தினாலோ விரைவான மற்றும் பலமான பதில் அளிக்கப்படும்" என தலிபான்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்" என கூறியுள்ளார்.