உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நான்காவது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. போரால் உக்ரைன் நாட்டு மக்கள் 150- க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் 1,000- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்ய படைகளின் ஆக்ரோஷ தாக்குதல்களால், உக்ரைன் நாட்டு மக்கள் ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதனால் உக்ரைன் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் கடும் குளிரிலும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயணிகளை அண்டை நாடுகளின் வழியாக மீட்டு வருகின்றனர் வெளிநாட்டு தூதரகங்கள்.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டுடன் பெலாரஸ் நாட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரதிநிதிகள் பெலாரஸ் நாட்டில் தயாராக இருக்கின்றனர். உக்ரைனில் தங்கள் படைகள் தீரத்துடன் போரிட்டு வருவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் அறிவிப்பை ஏற்றுள்ள உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, "ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால், அந்த பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டில் நடந்தால் பங்கேற்க முடியாது. வார்சா, இஸ்தான்புல், புடாபெஸ்ட், பாகூ உள்ளிட்ட இடங்களில் பேச்சுவார்த்தை நடத்தினால் பங்கேற்கிறோம். உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா போரிட்டு வருவது இனப்படுகொலை. உக்ரைனில் குடியிருப்புப் பகுதிகளை ரஷ்ய படைகள் தாக்கியது மிருகத்தனமான செயல். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என ரஷ்யா கூறியிருப்பது அப்பட்டமான பொய். மின் நிலையங்கள், மருத்துவமனைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கான வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, உக்ரைனின் பெர்டியான்ஸ்க், செர்னோபேவ்கா, கெனிஷெஸ்க், கேர்சான் பகுதிகளை ரஷ்ய ராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. உக்ரைன் படைகளின் ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றி உள்ளதாகவும், உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் 471 பேர் தங்களிடம் சரணடைந்துள்ளதாகவும் ரஷ்ய படை தெரிவித்துள்ளது.