கரோனா தொற்றிலிருந்து அண்மையில் குணமடைந்த பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா, பொதுவெளியில் மக்கள் மத்தியில் தனது முகக்கவசத்தை அகற்றியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
ஆரம்பம் முதலே கரோனா தடுப்பில் அலட்சியம் காட்டிவந்த அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனோரோ, ஊரடங்கு உள்ளிட்ட எந்தவிதத் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில் தீவிரம் காட்டவில்லை. இதனையடுத்து அங்கு லட்சக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, பெரும் பாதிப்புக்குப் பின்னர் நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டு கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அந்நாட்டு அதிபர் போல்சனாரோவுக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார். ஆனால், வீட்டில் தன்னால் தனித்திருக்க முடியவில்லை எனக்கூறிய போல்சனோரோ, சில நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் கரோனா பரிசோதனையை மேற்கொண்டார். இரண்டாவது மருத்துவப் பரிசோதனையின் முடிவில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியானது. இந்நிலையில், சிகிச்சைக்குப் பின் கடந்த வாரம் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தலைநகர் பிரேசிலியாவில் நேற்று நடந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், மக்களுக்கு மத்தியில் தனது முகக் கவசத்தைக் கழட்டினார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்திலும், ஊடகங்களிலும் வெளியான சூழலில், அவர் இதுதொடர்பாக தற்போது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். கரோனாவில் இருந்து மீண்டு சில நாட்களே ஆன நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருக்கும் ஒரு பொது இடத்தில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அவரது பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாக உள்ளதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.