கரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்தச் சூழலிலும், அரசாங்கங்களுக்கு எதிரான போராட்டங்களும் பல்வேறு புதிய வடிவங்களில் இன்றும் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில் மக்களின் தொடர் போராட்டங்கள் இஸ்ரேல் அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019- ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 114 நாடுகளில் அரசாங்கங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டின் தொடக்கம் முதல் கரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பெரும்பாலான நாடுகளில் இம்மாதிரியான போராட்டங்கள் நீர்த்துப்போயுள்ளன. இருப்பினும், இன்னும் சில நாடுகளில் இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் அதன் வடிவங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு சற்று மாற்றம் கண்டிருக்கிறது.
பிரேசிலில், ஜெய்ர் போல்சனாரோ கரோனா தொற்றுநோயைக் கையாள்வதில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக லட்சக்கணக்கான பிரேசில் மக்கள் தங்கள் ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளில் இருந்து தட்டுகள் மற்றும் பாத்திரங்களைத் தட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல ரஷ்யாவில் மெய்நிகர் பேரணிகள் (Virtual Rallies) அதிகரித்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் ஃபேஸ்புக் லைவ் வழியே ஒன்றிணைந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல ஆறு மாதங்களுக்கு முன்பு அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தோன்றிய லெபனானில், மக்கள் மீண்டும் வீதிகளில் போராடத் துவங்கியுள்ளனர். ஆனால் கூட்டம் கூட்டமாகச் சாலைகளில் நின்று கோஷமிடாமல், சாலைகளில் தங்களது வாகனங்களை நிறுத்தி, சமூக இடைவெளியுடன் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேலில் அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகுவை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் அந்நாட்டின் ராபின் சதுக்கத்தில் ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளியுடன் போராட்டங்களை மேற்கொண்டனர். இதனைத், தொடர்ந்து அந்நாட்டு பொழுதுபோக்குத்துறையை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா பாதிக்கப்பட்ட தங்களது துறைக்குத் தகுந்த நிவாரண உதவி வழங்கக்கோரி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவே உலக நாட்டில் திணறிவரும் சூழலில், இதுபோன்ற போராட்டங்கள் அரசாங்கங்கள் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளன.