![israel - palestine issue finance minister passes away](http://image.nakkheeran.in/cdn/farfuture/wCjnAZgfk2V1gl7uM0eYeDxlTXM-sNLg7svp9LRd-k8/1696946109/sites/default/files/inline-images/th_4817.jpg)
இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த பொதுமக்கள் பலரையும் ஹமாஸ் அமைப்பினர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. தொடர்ந்து இஸ்ரேல் அரசும் எதிர்த் தாக்குதலைத் தொடுத்து அங்கு போர் நிலவி வருகிறது.
இந்தப் போரில் இதுவரை 2,400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் அரசு, ‘போரை நாங்கள் துவக்கவில்லை. ஆனால், போரை நாங்கள் முடிப்போம்’ என்று அறிவித்துள்ளது.
இந்தநிலையில், ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சரான ஜவாத் அபு ஷமாலாவை சுட்டுக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. மேலும், அவர் பதுங்கியிருந்த பகுதியில் வான் வழித் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் ஜவாத் அபு ஷமாலா கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.