இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை 39 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதுவரை இந்தப் போரில் 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திகொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் குண்டு சத்தங்களுடன் காசா நகர் எங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்மாயில் ஹனியே ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்டது தொடர்பான தகவலை ஈரான் நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தெஹ்ரானில் உள்ள இஸ்மாயில் ஹனியா வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இஸ்மாயில் ஹனியே உடன் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.