இந்தியா கூடிய விரைவில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தவிருப்பதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்முத் குரேஷி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், "பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியா திட்டம் தீட்டி வருவதாக நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் இந்தியா சார்பில் நடந்து வருகிறது. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி ஏப்ரல் 16 ஆம் தேதியில் இருந்து 20 ஆம் தேதிக்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் என தெரிகிறது. இதுபற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்களிடம் ஏற்கனவே முறையிட்டுள்ளோம். சர்வதேச நாடுகள், இந்தியாவின் இதுபோன்ற பொறுப்பற்ற தன்மையை கண்டிக்க வேண்டும். மேலும் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், இந்த பிராந்தியத்தில் அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும்" என அவர் கூறினார். ஏற்கனவே இந்தியா அரசாங்கம் தேர்தலுக்கு முன்னதாக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் என பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.