தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக, ட்ரம்ப் தரப்பு கூறும் குற்றச்சாட்டை ஏற்க மறுத்த தேர்தல் பாதுகாப்பு அதிகாரியை பணியில் இருந்து நீக்கியுள்ளார் அதிபர் ட்ரம்ப்.
அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவையான நிலையில் பைடன் 290 தேர்தல் சபை வாக்குகள் பெற்றார். ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகக்கூறி அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
ஆனால், ட்ரம்ப் தரப்பின் தேர்தல் குற்றச்சாட்டை தேர்தல் பாதுகாப்பு அதிகாரி கிறிஸ் கிரெப்ஸ் தொடர்ந்து மறுத்து வந்தார். இந்நிலையில், அதிபர் ட்ரம்ப், கிறிஸ் கிரெப்ஸை பதவி நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், "தேர்தல் பாதுகாப்பு குறித்து கிறிஸ் கிரெப்ஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மிகவும் தவறானது. தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் நடந்துள்ளன. எனவே, கிறிஸ் கிரெப்ஸ் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.