இந்தோனேஷியாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க ஒரு புதுவிதமான முயற்சியை கையாண்டிருப்பது உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான தீவுகளில் நடைபெற்ற ஒரு ஆய்வில், இந்தோனேஷியா தீவுதான் மிகவும் மோசமான மாசுவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து இந்தோனேஷியாவில் இருக்கும் மாசுவை அகற்ற வேண்டும் என்று பல முயற்சிகளை தொடர்ந்து எடுத்துவந்தது. தீவுகள் முக்கால்வாசி பிளாஸ்டிக் குப்பைகளால் சூழப்பட்டிருந்ததால், முதலில் அதை தடுக்க பல திட்டங்கள் வகுத்தது.
இந்தோனேஷியா அரசு, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க, மறுசுழற்சி முறையை கொண்டுவந்தது. பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதித்தது. ஆனால், இந்த முயற்சிகள் எந்தவித பலனையும் அளிக்கவில்லை. தற்போது பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க புதிய யுக்தியை கொண்டு வந்துள்ளது இந்தோனேஷியா அரசு. அது என்ன என்றால், பஸ்ஸில் பயணம் செய்ய டிக்கெட்டுக்கு காசு தேவையில்லை 10 பிளாஸ்டிக் பாட்டில்கள் கொடுத்தாலே இரண்டு மணி நேரம் பயணம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. இரண்டு மணி நேரத்துக்குள் குறைந்த தூரம் பயணம் செய்ய ஐந்து பிளாஸ்டிக் பாட்டில்களே போதுமானது.
இவ்வாறு செய்வதால், ஒரு நாளைக்கு குறைந்தது 250 கிலோ பிளாஸ்டிக் பாட்டில்கள் பயணிகளிடம் இருந்து பெறப்பட்டால் மாதத்திற்கு சுமார் 7.5 டன் வரை சேகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நூதன நடவடிக்கையால் சுற்றுசூழலை பாதுகாப்பதுடன் மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்த முடியும் என்று அரசு எதிர்பார்த்திருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.