கரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பை தொடர்ந்து விமர்சித்துவந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்புடன் இருக்கும் உறவை ஒட்டுமொத்தமாக முறித்துக்கொள்ளப் போகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், அண்மையில் அந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கிவந்த நிதியுதவியை நிறுத்துவதாக அவர் அறிவித்தார். மேலும், கரோனா விவகாரத்தில் தொடர்ந்து சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படும் உலக சுகாதார அமைப்பின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். அதன்படி, கரோனா வைரஸ் விவகாரத்தில் தொடக்கத்திலிருந்து உலக சுகாதார அமைப்பு செயல்பட்ட விதம் குறித்து சுயசார்பு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளின் ஆதரவோடு அமெரிக்கா மசோதா ஒன்றைக் கொண்டுவந்தது. இந்த மசோதாவை ஏற்று விசாரணைக்கு ஒப்புதல் அளித்த உலக சுகாதார அமைப்பு நிதியுதவியை நிறுத்த வேண்டாம் எனக் கோரிக்கை வைத்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிபர் ட்ரம்ப், "உலக சுகாதார அமைப்பு கரோனா வைரஸ் விவகாரத்தை தவறாகக் கையாண்டு, பல்வேறு தகவல்களை மறைத்து, உலக நாடுகளை தவறாக வழிநடத்திவிட்டது. கரோனா வைரஸ் பரவியதற்குச் சீனாதான் காரணம் என்பதை நிரூபிக்க உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டது. அந்த அமைப்பு சீனாவின் கைப்பாவையாக மாறிவிட்டது. எனவே உலக சுகாதார அமைப்புடன் இருக்கும் உறவை ஒட்டுமொத்தமாக முறித்துக்கொள்ளப் போகிறோம். இவ்வளவு நாள் அந்த அமைப்புக்கு வழங்கிவந்த நிதியை, தேவை உள்ள நாடுகளுக்கு நேரடியாக வழங்கப்போகிறோம். அதேபோல சீனாவின் புதிய சட்டத்தினால் ஹாங்காங்கிற்கு வழங்கிய சிறப்பு உரிமைகளை ரத்து செய்வோம். ஹாங்காங்கில் இருந்து வருவோருக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.