Skip to main content

 “என்னை சிறையில் அடைத்தால் ஆபத்தானவனாக மாறுவேன்” - இம்ரான்கான் எச்சரிக்கை 

Published on 11/09/2022 | Edited on 11/09/2022

 

 Imran Khan

 

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தன்னை சிறையில் அடைத்தால் இன்னும் ஆபத்தானவனாக நான் மாறிவிடுவேன் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இம்ரான்கானின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது ஷபாஸ் ஷெரீப் பிரதமராக பதவிவகிக்கிறார். அவருக்கு எதிராக பொதுக்கூட்டங்களை நடத்திவரும் இம்ரான்கான், உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்திவருகிறார். 

 

இந்த நிலையில், கடந்த மாதம் 20ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரு பெண் நீதிபதியையும், போலீஸ் துறையையும் மிரட்டியதாக அவர் மீது இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட்டு அலி ஜாவத் புகார் செய்தார். இதையடுத்து, அவர் மீது பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

 

இது தொடர்பான விசாரணைக்கு இஸ்லாமாபாத் கோர்ட்டில் ஆஜராக இம்ரான்கான் வந்தபோது அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய இம்ரான்கான், “அதிகாரிகள் யாருக்கு பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. என்னை சிறையில் அடைத்தால் நான் இன்னும் ஆபத்தானவனாக மாறிவிடுவேன். பெண் நீதிபதி தொடர்பாக கோர்ட்டில் எனது கருத்து பற்றி எடுத்துக்கூறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. நாடு நாளுக்குநாள் பின்னடைவைச் சந்தித்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்