நடைபெற்று முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி வெற்றியின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் கரூருக்கு சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2026 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கி விட்டதாக பேசியுள்ளார்.
கரூரில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். 1,170 திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ''வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார கூட்டத்தை நான் கரூர் மாவட்டத்தில்தான் துவங்க வேண்டும் என்று நினைத்தேன். தற்பொழுது தேர்தல் பரப்புரையைத் தொடங்கி விட்டேன். இதுதான் பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் பிரச்சாரக் கூட்டமாக நீங்கள் அமைத்திருக்கக்கூடிய மேடை.
நாடாளுமன்ற வளாகத்தை போல் அமைத்திருக்கிறார். எனவே நாம் அத்தனை பேரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும். கலைஞரும் இதே கரூர் மாவட்டத்தில்தான் அவரது அரசியல் பயணத்தை துவங்கினார். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்தது மாவட்டம் இந்த கரூர் மாவட்டம். குளித்தலையில் தான் 1957ஆம் ஆண்டு முதல் முதலாக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு நீங்கள் எல்லாம் அவரை அனுப்பி வைத்தீர்கள். அதன் பிறகு அவர் 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை தமிழக முதல்வராகவும் அவரை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்'' என்றார்.