ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, இங்கிலாந்தின் ஸ்வின்டோன் எனுமிடத்தில் அமைந்திருக்கும் தனது உற்பத்தி ஆலையை வரும் 2021-ம் ஆண்டில் மூடப்போவதாக அறிவித்துள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் உற்பத்தி ஆலை கடந்த 30 ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஸ்வின்டோன் எனுமிடத்தில் இயங்கிவருகிறது. தற்போது இந்த ஆலையை வரும் 2021-ம் ஆண்டில் மூடப்போவதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியனில், இந்த ஆலையில் மட்டுமே ஹோண்டா சிவிக் மாடல் கார்கள் கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிக்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலையில் 3,500 பேர் பணி புரிந்துவருகின்றனர். மேலும் இந்த ஆலையில் ஒரு ஆண்டுக்கு 1,50,000.கார்கள் தயாரிக்கப்பட்டுவருகிறது.
இதற்கு முன்னதாகவே நிஸான் நிறுவனம் தனது எக்ஸ் டிரெய்ஸ் எனும் எஸ்யுவி உற்பத்தியை கைவிட்டிருந்தது. இது பிரெக்ஸிட் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு என அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆனால், ஹோண்டா நிறுவனத்தின் ஜப்பான் தலைவர் தாகஹிரோ ஹச்சிகோ, ஹோண்டா நிறுவனத்தின் இந்த முடிவு பிரெக்ஸிட் காரணமாக எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் மார்ச் 29-ம் தேதி வெளியேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.