கரோனா தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. இதுவரை அந்தநாட்டில் 2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்பு, அதனைத் தொடர்ந்த போடப்பட்ட ஊரடங்கால், பலர் வேலை இழந்தனர். பல்வேறு தொழில்கள் முடங்கின. இதனால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், 1.9 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான நிவாரண மசோதா, அமெரிக்காவின் செனட்டில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 1.9 ட்ரில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் 138 லட்சம் கோடி ஆகும் .
இந்தநிலையில், அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன், அந்த புதிய மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு 1,400 டாலர், நிவாரணமாக கிடைக்கும். இது இந்திய மதிப்பில் ஒரு லட்சத்திற்கு அதிகமான தொகையாகும்.
இரண்டு உலகப்போர்கள், வியட்நாம் போர், இரட்டைக் கோபுர தாக்குதல் ஆகிய மூன்றிலும் உயிரிழந்தவர்களைவிட அதிக அமெரிக்கர்கள், கரோனாவால் உயிரிழந்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.