அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும் அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை நேர்காணல் செய்தும் திரட்டியது என ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டிருந்த ட்வீட் புதிய பரபரப்பைக் கிளப்பி இருந்தது. அந்நிறுவனம் மேலும் ஒரு முக்கிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தவுள்ளதாக அதில் அறிவித்திருந்தது. ஆனால் எதைப் பற்றி என்று குறிப்பிடாததால் பலரும் அதானி குறித்த மேலும் சில ஊழல் பட்டியலைத் தான் வெளியிடப் போகிறது எனக் கூறி வந்தனர். ஆனால் அதானி குழுமத்தை அடுத்து தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் புகார் தெரிவித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஜேக் டோர்சே நடத்தி வரும் டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான 'பிளாக்'. பணம் செலுத்துவதற்கு பிளாக் வலைத்தளத்தை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்தி காட்டியதாக புகார் தெரிவித்துள்ளது.
போலி கணக்குகள் தொடங்க வாடிக்கையாளர்களை பிளாக் நிறுவனம் அனுமதித்ததாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் விதிகளை பின்பற்றாமல் பிளாக் ஏய்த்ததாகவும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தாமல் ஏமாற்றியதாகவும், பிளாக் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு பதில் சிறிய பதிவு நிறுவனங்கள் வழியாக பணப் பரிவர்த்தனை நடத்தியதாகவும் புகார் தெரிவித்துள்ளது. இதனால் ஜேக் டோர்சே தனிப்பட்ட முறையில் 500 கோடி டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 40,100 கோடி) வருமானத்தை அதிகரித்துக் கொண்டதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது ஹிண்டன்பர்க். இந்நிலையில், அறிக்கை வெளியான சில நிமிடங்களில் பிளாக் நிறுவனத்தின் பங்குகள் 21 சதவிகிதம் குறைந்தது.