கொலம்பியாவைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் ஷாரிக் தோஹார். இவருக்கு கிளெயின் லெவின் என்ற விநோத நோய் வந்துள்ளது. இந்த நோய் உள்ளவர்கள் தூங்க ஆரம்பித்தால் பல நாட்கள் தூக்கத்திலேயே இருப்பார்கள். அவர்கள் முழித்து வேலை செய்ய துவங்கினால் சில மணி நேரங்களிலேயே சோர்வாகி மீண்டும் தூங்கச் சென்று விடுவார்கள். உலகிலேயே இந்த வியாதி 40 பேருக்குத் தான் உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஷாரிக் தோஹரும் ஒருவர். இந்த வியாதி உள்ளவர்களுக்கு அந்தந்த நாட்டுச் சுகாதாரத்துறை தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. கடும் தூக்கத்தில் இருக்கும் இவர்களுக்குப் பசி, தாகம் என எதுவுமே தெரியாது ஆனால் சரியான நேரத்திற்குச் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
அதனால் அவர்கள் தூங்கும் நேரத்தில் உணவைத் திரவப்பொருளாக மாற்றி அவர்கள் உடலுக்குள் செலுத்துவார்கள். மேலும் உடலுக்குத் தேவையான நீரும் செயற்கையாக உடலுக்குள் செலுத்தப்படும் அப்பொழுதுதான் அவர்கள் உயிர் வாழ முடியும். இந்நிலையில் ஷாரிக் தோஹருக்கு அந்நாட்டுச் சுகாதாரத்துறை சார்பில் திரவ உணவும், நரம்பியல் சிகிச்சையும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் திரவ உணவு கடந்த 2 மாதங்களாக வழங்கப்படவில்லை என தோஹாரின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். தோஹருக்கு இருக்கும் இந்த விநோதமான நோய் தற்போது கொலம்பியா நாட்டு மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.