அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணவுள்ளதாக ஜார்ஜியா மாகாண நிர்வாகம் அறிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில், பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவையான நிலையில், பைடன் 290 தேர்தல் சபை வாக்குகள் பெற்றார். ஜோ பைடனை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகக்கூறி அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணவுள்ளதாக ஜார்ஜியா மாகாண நிர்வாகம் அறிவித்துள்ளது. 16 சபை வாக்குகளைக் கொண்ட ஜார்ஜியாவில் பைடனை விட சுமார் 14,000 வாக்குகள் மட்டுமே பின்தங்கியிருந்தது ட்ரம்ப்பின் குடியரசு கட்சி. எனவே, இந்த மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என குடியரசு கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இந்த சூழலில், ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து வாக்குகளும் கைகளால் மறுபடியும் எண்ணப்படும் என ஜார்ஜியா மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.