பல ஆயிரக்கணக்கான தியாகிகளின் ரத்த சரித்தரத்தால் உருவானது சுதந்திர இந்தியா. இந்திய நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த மானிதர் மகாத்மா காந்தி அவர்கள்.ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2 ந் தேதி நாடு முழுக்க மகாத்மா காந்தியின் சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் முதல் பல்வேறு அமைப்பினர் வரை மலர் மரியாதை செலுத்துவார்கள்.இந்த வரிசையில் காந்திக்கு தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் கோயில் இருப்பதை பார்ப்போம்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி என்ற ஊரில் அருகாமையில் செந்தாம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் வசித்த வையாபுரி முதலியார் என்பவர் காந்தியடிகள் மீது அளவற்ற பற்று கொண்டு காந்தியின் பக்தராக வாழ்ந்து வந்தார். அவர் சென்ற 1997 ஆம் ஆண்டு காந்திக்கும் அவரது துணைவியார் கஸ்தூரிபா அம்மையாருக்கும் அந்த கிராமத்தில் ஒரு கோயில் அமைத்தார். அந்த கோயிலில் காந்தியடிகள் மற்றும் கஸ்தூரிபா ஆகியோர்களது சிலைகளையும் நிறுவினார். தொடர்ந்து ஆண்டுதோறும் ஜனவரி 26 குடியரசு தினம் , சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 , காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 ஆகிய மூன்று நாட்களில் காந்தியடிகள் மற்றும் கஸ்தூரிபா சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்து வந்ததோடு மற்ற நாட்களிலும் நாள் ஒன்றுக்கு மூன்று வேளை பூஜையும் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் இன்று காந்தி ஜெயந்தி நாளில் மகாத்மா காந்தி சிலைக்கும் கஸ்தூரிபா அம்மையாரின் சிலைக்கும் சிறப்பு அபிஷேகம் அங்கு நடைபெற்றது. அதில் மஞ்சள், பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், விபூதி, பன்னீர், இளநீர் என பலவகையான நீரூற்றி அபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணனும் கலந்து கொண்டார். பிறகு அங்கு வந்த அனைவருக்கும் பொங்கல், இனிப்பு மிட்டாய் வழங்கப்பட்டது. இக்கோயிலை கட்டி தொடர்ந்து பராமரித்து வந்த வையாபுரி முதலியார் சென்ற ஆறு வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். ஆனாலும் அவரது மகன் தங்கராஜ் என்பவர் இந்தக் கோயிலை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்தக் கோயிலை அரசே எடுத்து நடத்த வேண்டும் என அவரும் அப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.