ஷார்ஜாவின் ஆல் நஹ்தாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை ஷார்ஜாவின் ஆல் நந்தாவில் உள்ள அப்கோ டவர் எனும் குடியிருப்புக் கட்டிடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது. பல இந்தியர்கள் தங்கியுள்ள அந்தக் குடியிருப்புக் கட்டிடத்தின் பத்தாவது தளத்தில் ஏற்பட்ட தீ மளமளவெனக் கட்டிடமும் முழுவதும் பரவியது. இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 47 தளங்கள் கொண்ட இந்தக் கட்டிடத்தில் 38 தளங்கள் குடியிருப்புப் பகுதிகளாகவும், இரண்டு தளங்கள் நிர்வாகச் சேவைகளுக்காகவும், மீதமுள்ள தளங்கள் வாகனம் பார்க்கிங் வசதிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு தளத்திலும் 12 வீடுகள் அமைந்துள்ளன.
நேற்று இரவு 9.04 மணியளவில் அப்கோ கோபுரத்தின் 10வது மாடியில் ஏற்பட்ட தீ வேகமாகக் கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. தகவலறிந்து விரைந்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத்துறை தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த பொதுமக்களையும் வெளியேற்றியது. இந்தத் தீவிபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தீவிபத்தால் நேற்று இரவு அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.