இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், மற்றுல் இஸ்ரேலை சேர்ந்த பொதுமக்கள் பலரையும் ஹமாஸ் அமைப்பினர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இதற்குக் கடுமையான பதிலடிகளை இஸ்ரேல் தரப்பு கொடுத்து வருகிறது. இப்படியாக இரு தரப்பில் இருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இதனிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் ஜவாத் அபு ஷமாலா விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இவர் ஹமாஸ் அமைப்புக்கு நிதி சேகரிப்பு, நிதி நிர்வாகம் உள்ளிட்டவற்றை ஜவாத் கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.