
தென்னாப்பிரிக்காவில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கிய ‘பிரிக்ஸ்’ உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமஃபோசா, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உள்ளிட்ட தலைவர்கள் இதில் ருஷ்ய அதிபர் புதின் காணொளி வாயிலாக பங்கேற்றார். மூன்று நாள் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டத்தின் முதல் நாள், பொருளாதாரம், முதலீடுகள், இணைப்பு நாடுகளிடையே நல்லுறவை வலுப்படுத்த விரிவான விவாதங்கள் நடைபெற்றன. இரண்டாம் நாள் பிரதமர் மோடி தனது உரையில், “இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்... வரும் ஆண்டுகளில் உலகின் வளர்ச்சி இயந்திரமாக இந்தியா இருக்கும்” என பேசினார். பிரிக்ஸ் நாடுகளின் எண்ணிகையை விரிவுபடுத்த வேண்டும். தெற்கிலுள்ள நாடுகளையும் இணைக்க முன்னெடுப்புகள் தேவை எனவும் விவாதிக்கப்பட்டது. பிரிக்ஸ் மாநாட்டை தொடர்ந்து கிரீஸுக்கு இன்று மோடி சென்றுள்ளார்.
பிரிக்ஸ் மாநாடு கடைசி நாளான நேற்றுடன் முடிவடைந்தது. இதில் முந்தைய தினம் அறிவிக்கப்பட்ட, வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் ஐந்து நாடுகளின் பிரிக்ஸ் கிளப்பின் விரிவாக்கம் குறித்து நேற்று சில முன்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அர்ஜென்டினா, எகிப்து, ஈரான், எத்தியோப்பியா, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஆறு புதிய நாடுகள் ஜனவரியில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது.

கூட்டத்தில், சீனா பிரிக்ஸின் விரிவாக்கத்திற்கு பெரும் முனைப்பு காட்டியதாக சொல்லப்படுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங், “இந்த உறுப்பினர் விரிவாக்கம் வரலாற்று சிறப்புமிக்கது” என்று கூறினார். மேலும் சீனா, மேற்கு நாடுகளின் துணையின்றி தெற்கு நாடுகளை இணைத்து வலுப்பெறவே இதனை மேற்கொண்டதாகவும் அறிய முடிகிறது. தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவும், “எதிர்காலத்தில் மேலும் பல நாடுகள் இணைவதற்கு, முக்கிய நாடுகள் அளவுகோல்களை தீர்மானித்து அனுமதிக்கும். ஆனால் இந்தமுறை எத்தனை நாடுகள் எவ்வளவு விரைவாக இணைய முடியும்” என்பது பற்றி பதிவிட்டார்.
இவர்களைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பின்னர் புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, “பிரிக்ஸ் விரிவாக்கத்திற்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும். புதிய உறுப்பினர்களை பிரிக்ஸில் சேர்ப்பது ஒரு அமைப்பாக செயல்பட வலுப்படுத்தும் என இந்தியா நம்புகிறது” என்று அவர் கூறினார்.
உக்ரைன்-ரஷ்ய போர் சமயத்தில் ஏற்பட்ட குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்படக் கூடும் என்பதால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யாவில் இருந்து காணொளி மூலம் இணைந்தார்.
அவர் பேசுகையில் மேற்கத்திய நாடுகளை சாடியும், நவ-தாராளமயம், வளரும் நாடுகளின் பாரம்பரியங்கள் மற்றும் அந்த நாடு ஆதிக்கம் செலுத்தாத பலதுருவ நாடுகளின் உருவாக்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறினார்.

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, “பிரிக்ஸ் அமைப்பில் சேருவதற்கு மற்ற நாடுகளின் ஆர்வம், புதிய உலகப் பொருளாதார ஒழுங்குக்கான அவசியம் எவ்வளவு என்பதைக் காட்டுகிறது” என்றார். ஆனால், இவர் செவ்வாயன்று, அமெரிக்கா மற்றும் ஏழு வளமான பொருளாதாரங்களுக்கு போட்டியாக இருக்க வேண்டும் என்ற பிரிக்ஸ் மாநாட்டின் யோசனையை நிராகரித்தார். பின்னர் நேற்று பிரேசில் ஜனாதிபதி தலைமை விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர், “தங்கள் நாட்டை குழுவில் இணைவதற்கு ஒப்புதலை வழங்கியதை பாராட்டுகிறோம்” என்றார்.

நேற்றோடு முடிவடைந்த பிரிக்ஸ் மாநாட்டை தொடர்ந்து. கிரேக்கப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸின் அழைப்பின் பேரில் இன்று மோடி க்ரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். கிரீஸுக்கு செப்டம்பர் 1983 இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்றுவந்த பிறகு தற்போது பிரதமர் மோடி 40 ஆண்டுகள் கடந்து க்ரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பில் பிரதமர் மோடி பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என்றும் வர்த்தகம், முதலீடுகள், கப்பல் போக்குவரத்து, இடம்பெயர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்றவைகளில் கவனம் செலுத்துவார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், இரு நாடுகளைச் சேர்ந்த வணிகத் தலைவர்களுடன் உரையாட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வருகிறது. கிரீஸில் உள்ள இந்தியர்களையும் சந்தித்து உரையாடுவார் என்றும் சொல்லப்பட்டது.