கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இத்தாலி அரசுக்கு ஃபெராரி குடும்பம் சார்பாக 89 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 165- க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிய நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,37,553 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி நாட்டில் 59,000க்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், 5,400க்கும் மேற்பட்டோர் இத்தாலியில் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இத்தாலியின் மிகப்பெரிய பணக்கார குடும்பமான அக்னெல்லி குடும்பம் இத்தாலி அரசுக்கு 11 மில்லியன் யூரோ (89 கோடி ரூபாய்) நிதி அளித்துள்ளது. ஃபியட் மற்றும் ஃபெராரி ஆகிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த குடும்பத்திற்குச் சொந்தமானவையே ஆகும். மேலும், நிதியுதவியைக் கடந்து, பொதுமக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிப்பதற்காக இத்தாலியச் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இந்நிறுவனம் சார்பில் வாகனங்களையும் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.