பயன்பாட்டாளரின் செல்போனில் இருந்து ரகசிய தகவல்களை போலி வாட்ஸ்அப் செயலி திருடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல கோடிக்கணக்கான செல்போன் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் பெயரிலும் போலி செயலி ஒன்று உலாவருவதாக மால்வேர்பைட் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. அது வெளியிட்டுள்ள தகவலின்படி, பொதுவாக வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளம் தொடர்பான செயலிகளை, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தே தரவிரக்கம் செய்து பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த போலி வாட்ஸ்அப் அதற்கான லிங்க்குடன் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
இதனைத் தரவிரக்கம் செய்ய முற்படுவோரின் செல்போன் திரையில், தங்க நிறத்திலான வாட்ஸ்அப் முத்திரையுடன் கூடிய பக்கம் தோன்றும். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விதிகளை (Terms & Conditions) ஏற்றுக்கொள்வதாக அழுத்தினால், அது டவுன்லோடு செய்வதற்கான கோரிக்கையை முன்வைக்கும். அதை அழுத்திய பின்னர், கூகுள் ப்ளே ஸ்டோருக்கு செல்லாமல், நேரடியாக ப்ரவுசரின் வழியாக ஒரு இணையதளம் திறக்கும். முழுக்க முழுக்க அரபு மொழியில் இருக்கும் அந்த இணையதளத்தில், ‘வாட்ஸ் ப்ளஸ் ப்ளஸ் வாட்ஸ்அப்’ என்ற செயலியை டவுன்லோடு செய்ய பயன்பாட்டாளர் பணிக்கப்படுவார். இந்த செயலி அசல் வாட்ஸ் அப்பைவிட கூடுதல் வசதிகளைத் தந்தாலும், கூடிய விரைவில் பயன்பாட்டாளரின் செல்போனில் இருக்கும் விவரங்கள் திருடப்பட்டிருக்கும்.
எனவே, கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக மட்டுமே வாட்ஸ் அப் உள்ளிட்ட எந்த செயலியையும் தரவிரக்கம் செய்யுமாறு, மால்வேர்பைட்ஸ் எச்சரித்துள்ளது.