ஃபேஸ்புக்கில் பதிவிடும் பதிவுகளின் உண்மைத்தன்மை ஆகியவை என்றும் கேள்விக்குறிதான். போலி செய்திகளை, வதந்திகளை, வெறுப்புப் பிரச்சாரங்களைக் கட்டுப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் எத்தனை முயற்சிகள் எடுத்தபோதும் அது பெரும்பாலும் தோல்வியிலேயே முடிகிறது. ஒன்று செய்தி உண்மையாகவே, பொய்யாக இருக்கிறது. அல்லது உண்மை பதிவு பொய்யென்று ரிப்போர்ட் செய்யப்படுகிறது.
உண்மை பதிவுகளை, பொய் என்று ரிப்போர்ட் செய்பவர்கள் இன்று அதிகமாகிவருகின்றனர். இதற்கு காரணம் தேடினால், வெறுப்பு மனப்பான்மை உள்ளவர்களே இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்களாம். இவர்களால் உண்மை செய்தியும், அதன் தரத்தை இழந்து பொய் என்னும் கட்டத்துக்குள் சிக்கி, அதிக எண்ணிக்கையில் ரிப்போர்ட் செய்யப்பட்டு அது ஃபேஸ்புக்கால் நீக்கப்படுகிறது, சில சமயம் அந்தப் பதிவாளரும் பிளாக் செய்யப்படுகிறார்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக ஒரு முயற்சியை கையில் எடுத்திருக்கிறது. இதற்குமுன் ஒரு பதிவு மீண்டும் மீண்டும் பொய் என்று ரிப்போர்ட் செய்யப்பட்டால் முதலில் அந்தப் பதிவையும், அடுத்தகட்ட நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட வலைப்பக்கத்தையும் முடக்குவது என்று முகநூல் நிறுவனம் நடவடிக்கை எடுத்துவந்து. இதனால் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் சில உண்மை பதிவுகளும் பாதிக்கப்பட்டுவந்தன. ஆனால் இப்போது வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பின் மூலம், ஒருவர் மீண்டும் மீண்டும் சில பதிவுகளுக்கு பொய் என்று ரிப்போர்ட் செய்தால், முதலில் அவர் எத்தனை முறை இப்படி செய்திருக்கிறார் என்று கணக்கு பார்த்து, பிறகு அவர் உண்மையாக செய்கிறாரா அல்லது அவரின் விருப்ப வெறுப்புகளால் இப்படி செயகிறாரா என்று பரிசோதித்தபிறகு, சம்பந்தப்பட்ட பதிவின் மீதோ அல்லது பொய் என்று ரிப்போர்ட் செயும் நபரின் மீதோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.