கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க வான் பரப்பில் சீன பலூன் ஒன்று பறந்த நிலையில் அதனை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இதன் மூலம் எங்கள் நாட்டை உளவு பார்க்கத்தான் இந்த பலூனை அனுப்பியுள்ளதாக சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் இது வானிலை குறித்த ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட பலூன், உளவு பார்ப்பதற்காக அனுப்பப் படவில்லை என அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்தது சீனா.
இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அமெரிக்க வான் பரப்பில் மர்மப் பொருட்கள் பறந்துகொண்டு இருப்பதும், அதனை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்துவதும் வாடிக்கையாக நடந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் நேற்றும் அமெரிக்காவின் மிச்சிகன் வான் பரப்பில் ஒரு மர்மப் பொருள் பறந்த நிலையில், பின்பு அதுவும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த நிலையில் சீனாவின் குவிண்டோவா நகரின் கடல் பரப்பிற்கு மேல் பறக்கும் தட்டு தென்பட்டதாகவும், அதனை சுட்டு வீழ்த்த முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி வானில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் வேற்று கிரகவாசிகளின் செயல்களாக இருக்குமோ என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், இது குறித்த எலான் மஸ்கின் பதிவு வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கவலைப்படாதீர்கள் என்னுடைய சில ஏலியன் நண்பர்கள்தான் வந்திருக்கிறார்கள்” என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார். இதனை தற்போது பலரும் ரீட்விட் செய்து வருகின்றனர்.
Don’t worry, just some of my 👽 🛸 friends of mine stopping by …— Elon Musk (@elonmusk) February 12, 2023