அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.
இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.
இந்த நிலையில் டெஸ்லா நிறுவனரும், உலகப் பணக்காரருமான எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராகப் பதிவிட்டுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் மின்சார வாகன உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் எலான் மஸ்க் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் எலான் மஸ்க் தனது சமூக வலைத்தளத்தில், ‘இந்த முறை ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் எலான் மஸ்கின் இந்த கருத்து ட்ரம்ப்பிற்கு ஆதரவாக இருக்கும் என அமெரிக்க அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.