துருக்கி மற்றும் சிரியாவில் ஆகிய நாடுகளில் கடந்த பிப்ரவரி மாதம் சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மீட்புப்பணிகள் தொடர்பான காட்சிகள், செய்திகள் சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் 46,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தை வரலாறு காணாத பேரிடர் என அந்த நாடு அறிவித்தது.
இந்நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் கடற்கரை மாகாணமான கயாஸ் மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த மாகாணத்தின் பலோ நகரில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்தன. இந்த நிலநடுக்கத்தால் முதற்கட்டமாக 4 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 12 அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களை மீட்கும்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.